×

கோவை மை வி3 நிறுவனத்தில் 200 பேருக்கு போலி டாக்டர் பட்டம்: ஆதாரத்துடன் புகார்

கோவை: கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனம் மீது இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு எதிராக பலர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதேபோல், நேற்று சிலர் கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி நிருபர்களிடம் கூறியதாவது: மை வி3 நிறுவனத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தற்போது மேலும் 10 பேர் கொடுத்த புகாரை அளித்துள்ளோம். மை வி3 உரிமையாளர் விஜயராகவன் யுனிசெப் அமைப்பை உருவாக்கி அதன் தேசிய இயக்குனராக இருந்துள்ளார். அதன் மூலம் தனக்கு தானே போலியான டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார். மேலும் தனது நிறுவனத்தில் உள்ளவர்கள் 200 பேருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார்.

அதனை வீடியோ ஆதாரத்துடன் புகாரில் கொடுத்துள்ளோம். இந்த நிறுவனத்தில் உள்ள இக்னிசியஸ் பிரபு என்பவர் மதுரையை சேர்ந்த ஒருவரிடம் கவர்னரிடம் விருது வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் ரூ.190 மதிப்பிலான ஹெர்பல் தயாரிப்புகளை ரூ. 3900க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த மருந்துகளை தயாரிப்பவர் 10வது பெயிலானவர். இவர் ஒன்றிய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் உள்ளார். இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை மை வி3 நிறுவனத்தில் 200 பேருக்கு போலி டாக்டர் பட்டம்: ஆதாரத்துடன் புகார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore My V3 ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை